Saturday 13 February 2016

ஓர் உள்ளத்து உணர்வுகள் ..........

"நீர்வேலி மாமி":
பால் போல வெள்ளை நிறம், சத்தமில்லாத பேச்சு, குழந்தைத்தனமான சிரிப்பு- உங்களை நினைக்கும்போது இவைதான் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது..
யாழில் கடும் சண்டை நடந்த 90 முற்பகுதிகளில், நீர்வேலிக்கு திருவெம்பாவை பூசை காலத்தில் உங்கள் வீட்டில் வந்து 2-3 நாட்கள் தங்குவதுதான் நான் மிக ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் "vacation" ஆக இருந்தது..அப்பா,அம்மா இல்லாமல் எனது தனி "வெளியூர்" பயணமும் நீர்வேலிக்குத்தான் என்று நினைக்கிறேன். சுழிபுரத்திலிருந்து 2 மணி நேர சைக்கிள் மெதுவோட்டம்..படலை திறந்து வீட்டுக்குள் வர முன்னரே "வெயிலுக்கால வாறியள் மோர் தரவே" என்று வாசலில் நின்று நீங்கள் கேட்பது இப்பவும் கண்ணுக்குள்ள நிக்குது.. அந்த 3 நாட்களும் ஒரே கொண்டாட்டமாதான் இருக்கும்..எத்தனை கறிகள், விதம் விதமான பொரியல்கள் சமைப்பீர்கள்? இதில் வேறு இரசம், சொதி, மோர், தயிர்..இப்ப நினைச்சாலும் வாய் ஊறுது..
வீடு திரும்பும்போது கட்டாயமாக ஒரு கப்பல் அல்லது இதரை வாழை குலை வாசலில் வைத்திருப்பீர்கள்.."ஒண்டு தான் போட்டது..அதை அம்மாட்டை குடு" என்று சொல்லும்போது நீங்கள் உங்கள் அருமை "தம்பி" குடும்பத்தின் மீது வைத்திருந்த பாசம் புரியும்..

அப்பப்பா அடிக்கடி சொல்லுவார்..அந்தக்காலத்தில் உங்கள் திருமணம் வெகு விமரிசையாக நடந்ததாம்..நீங்கள் இனியில்லை என்ட வடிவாய் இருந்தீர்களாம்..மாப்பிள்ளை,பொம்பிளை மயில் வாகனத்தில் பவனி வந்ததை ஊரே வாய் பிளந்து பார்த்ததாம்..
பிறவிச்சைவமாயிருந்தும், வீட்டுத்தோட்டத்தில் விளைந்த சேதன மரக்கறிகளை அனேகமாய் சாப்பிட்டும், இறுதிக்காலத்தில் உங்களுக்கு புற்று நோய் வந்ததை நம்பவே முடியவில்லை..
எட்டு பிள்ளைகள், இருபது பேரப்பிள்ளைகள் மற்றும் பீட்டப்பிள்ளைகள் கண்டு, உங்கள் வெள்ளை மனம் போல தூய்மையான வாழ்க்கை வாழ்ந்து எல்லோரும் இறுதியாக போய்ச்சேர வேண்டிய இடத்தை அடைந்திருக்கிறீர்கள்..
நிம்மதியாக போய் வாருங்கள் "நீர்வேலி மாமி.."
--ஓம் சாந்தி சாந்தி சாந்தி---