Tuesday, 16 February 2021

 பாரதி முன்பள்ளியில் சிறார்களாக கற்று, பாடசாலை முகிழ் நிலை மாணவர்களாக 2021 இல் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான சிறப்பிப்பு நிகழ்வு 14 Feb 2021 அன்று பிற்பகல் பாரதி முன்பள்ளியில் இடம்பெற்றது. பாடசாலை முகிழ்  நிலையில் 31 மாணவர்கள் இச் சிறப்பை பெற்றுக்கொண்டனர். திரு.வி .உமாபதி, மகப்பேற்று வைத்திய நிபுணர்  கு.சுஜாகரன் ஆகியோரின் அனுசரணையுடன் நடைபெற்ற நிகழ்வில் ஆசிரிய ர்களுடன் மாணவர்களும், சிறார்களும் ,அவர்தம் பெற்றோர்களும், முன்பள்ளி சமூகத்தினரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.  முகிழ்  நிலை மனவர்களிற்க்கான கௌரவிப்பு அங்கிகள் அணிவிக்கப்பெற்று ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் முன்றலில் இருந்து மாணவர்கள் அணியாக அழைத்துவரப்பெற்றனர். முன்பள்ளியில் இடம்பெற்ற நிகழ்வில் முகிழ் நிலை  மாணவர்களுக்கான வாழ்த்துரைகளும் , ஆசிரியர்களிற்க்கான கௌரவிப்புகளும், முகிழ் நிலை மாணவர்களின் உரைகளும் இடம்பெற்றன.

Thursday, 28 May 2020

தேடல்.....28/05/2020

      பாரதி கலை மன்றத்தின் வரலாற்றுத் தடங்களில் இருந்து பதிவு ஒன்றினை ஓர் அன்பர் கேட்டார். தேடினேன்... அவர் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. எத்தனையோ எமது பாரதி சமூகம் சார்ந்த விடயங்கள் இருந்த போதிலும் அவர் எதிர்பார்த்ததனை எம்மால் வழங்க இயலவில்லை என்பது கவலையான விடயம் தான். இருப்பினும் கவலைகளுடன் வாழ்வதனையும் விட எதிர்காலத்திலாவது இப்படியான கவலைகள் இன்றிய வாழ்வு அமையாதா? என எண்ணினோம். எவரையும்எதிர்பாராமல் விட்ட பணியை தொடர்வது என தீர்மானித்தோம். தொடர்வோம்.                " கலைமன்றம்" எனும் பதத்தினை பயன்படுத்துவதனை எவராவது ஆட்சேபித்தாலோ அல்லது திரைமறைவு விமர்சனங்களை முன்வைத்தாலோ எமது தலைப்பினை மாற்றுவதற்கும் தயங்கப் போவதில்லை. ஏனெனில் காலப் பதிவுகளில் பெரியதொரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இத்தளத்தின்கடந்த காலப் பதிவுகளை நோக்கும்எவரிற்கும்இதன் பெறுமதி புரியும். எந்தவொரு சமூக வலைத் தளங்களிலும் இல்லாத சிறப்பை இங்கு காண முடியும். கலை மன்றமென்றாலென்ன முன்பள்ளியென்றாலென்ன எமது கிராமம் அயல்கிராமம் என்றால் என்ன அயற்பாடசாலைகளாக இருந்தாலென்ன ஆலயங்களாக இருந்தாலென்னநன்மை - தீமைகள், துக்கம் - சந்தோசம் ,கலைத் திறன்கள் உடற்திறன்கள் எதுவாக இருந்தால் என்ன அவை அனைத்தையும்ஒரே இடத்தில் அறிந்து கொள்ள கூடிய அற்புதமான யதார்த்த நிலை ஒன்றினை இங்கு காணலாம். ஆர்வமுள்ளோர் எம்முடன் இணைந்து கொள்ளலாம்.... நன்றி.

Thursday, 17 October 2019


Sunday, 22 September 2019

     அமரர் கிருஷ்ணர் சிவசிதம்பரம் 

 பாரதி கலை மன்றம் 1982 இல் ஸ்தாபிக்கப் பெற்ற போது, அமரர் அவர்கள் 50 வயதினைக் கடந்திருந்த போதிலும் அன்றைய துடிப்பான இளைஞர் கூட்டத்தினருடன் தானும் '"இளைய தளபதியாய் " இணைந்து அவர்களினை போஷிக்கும் போஷகரானார்.இலங்கை போக்குவரத்துச் சபையின் பொறிவலராக சிறந்த பணியாற்றினார். எனினும் 

"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை."

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது எனும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க கிராமமே மேன்மை எனக் கருதி  விவசாயத்தினை தனது சீவனோபாய தொழிலாக முன்னிறுத்தினார்  பல்வேறு பொருளாதாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்த 70 களில் தளராது  விவசாயத்தினை சவாலாக கையிலெடுத்து பல்வேறு சாதனைகளை படைத்துக் காட்டினார். 'மிசின் மாமா' என சிறார்கள் செல்லமாக அழைக்குமளவிற்கு பிரபலம் பெற்றிருந்தார்.நீல நிற  Ford Dexta உழவுஇயந்திரத்தில் 70 களில் 80 களில் கிராமத்து குச்சொழுங்கைகளில் வலம்வந்தது என்றும் மறப்பதற்கில்லை. விவசாயத்துடன் தனது பல்வேறு கலைத் திறன்களூடாக கைப் பணியை வலிதாக சிரமேல் கொண்டு காண்போரைக் கவரக் கூடிய கைவினைப் பொருட்களை சிருஷ்டித்தார் . போராட்ட காலங்களிலும் சரி அதற்கு முன்பாகவும் ,பின்பாகவும் கலைப் படைப்புகள் பலவற்றை பாரதி கலை மன்றத்திற்கென வடிவமைத்தார்..சமகால நிகழ்வுகளை சிறப்பாக வெளிக்கொணரும் வகையிலான பல படைப்புகளை அர்பணித்திருந்தார் . கால மாற்றங்களினூடாக அவற்றில் பல எம்மிடையே இல்லாதிருந்தாலும் அவற்றை பார்த்தவர்களின் பசுமையான நினைவுகள் இன்றும் எம்முன்னே பசுமரத்தாணி போல் நிழலாடுகின்றன.  விக்ரோரியாக் கல்லூரி என்றாலென்ன ஐக்கிய சங்க வித்தியாசாலையாக இருந்தாலென்ன அங்கு நடைபெற்ற பல நிகழ்வுகளில் அன்னாரது பங்கு பணிஇருந்திருக்கும். சாரணர் இயக்கத்தின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தேவையேற்படும் வேளைகளில் எல்லாம் இவர் தனது முத்திரையை பொறிக்காத இடமில்லையெனலாம். பாடசாலை விளையாட்டுப் போட்டிகளின் போது , போட்டி தொடக்குநராக கம்பீரமாக காட்சி தருவார். விளையாட்டு நிகழ்வுகளை பயிற்றுவிப்பதிலும் கைதேர்ந்தவர் எனலாம். இன்றைய பாடசாலை அபிவிருத்திச் சங்கம் அன்று பெற்றார் - ஆசிரியர்  சங்கமாக செயற்பட்ட வேளையிலும் அவர் தனது ஆர்வத்தினை அதன் மீதும் கொண்டிருந்தார்.

  வீட்டினை மாதிரி வீட்டுத் தோட்டமாக எவ்வாறு மாற்றலாம் என்பதற்கு பல்வேறு திட்டங்கள் போடுவதனுடன் செயற்படுத்திக் காட்டியும் வீட்டுத் தோட்டபோட்டிகளில் பங்கு பற்றியும் வெற்றி பெற்றார் 
ஆலய நிகழ்வுகளின்போது தவறாது சமூகம் தந்து இறையருளை வேண்டுவதுடன் தன்னாலியன்ற சரியை தொண்டுகளையும் ஆற்றுவார். கூட்டு பிரார்தனைகளிலும்,பஜனை படிப்பதிலும்  தனது மெய்யுருகி தனது குரல் வெளிப்படுத்துவார். பைரவ பக்தனாக , முருக பக்தனாக, விநாயக பக்தனாக , அம்பிகை பக்தனாக, கிருஷ்ணபக்தனாக பல வேறு வடிவங்களிலும் அவரை நாம் பார்த்திருக்கின்றோம். அண்மைய காலங்களில் அவர் காவி உடை தரித்தே தனது துறவற நிலையை வெளிப்படுத்தி வந்தார். நோய்வாய்ப்பட்டிருந்த வேளையிலும் மிக நிதானமாக தன்னம்பிக்கையுடன் நோயை எதிர்கொண்டார் . தியானப் பயிற்சி ,மூச்சுப் பயிற்சி, யோகாப் பயிற்சி போன்றவற்றிலும் தான் பெற்ற பயனை ஏனையோரும் பெறவேண்டும் என்பதிலும் கவனத்தை செலுத்தினார். அவர் தனது சாதாரண இருக்கையை பத்மாசனமாகவே கடைக்கொள்வார். பொன்னாலை கிருஷ்ண பக்தனாக நாமம் தரித்த அவரது பரந்த நெற்றி என்றும் எம் மனக்கண் முன்னே வரும். எத்தனையோ வாகனங்களை செலுத்தும் திறமை அவரிடம் இருந்தபோதிலும் மிக எளிமையாக துவிச்சக்கர வண்டியிலேயே பல மைல் தூரம் வலம் வந்தார்.இன்று வான் வெளியில் வலம் வருகின்றார் ,


(புகைப்பட அனுசரணை: திரு.சி.முகுந்தன்)

Wednesday, 24 July 2019

Monday, 1 April 2019

இப்படியும் நடக்கலாம் ......ஒரு பையன் 8ஆம் வகுப்பு படிக்கும்போது..
#சிகரெட் பிடிக்கப் பழகினான்...
பதினொன்றாம் வகுப்பிலேயே
#தண்ணி அடிக்கப் பழகினான்.
தட்டுத் தடுமாறி கல்லூரிக்கு வந்தான். அங்கு #சீட்டாடவும்பெண்கள் தொடர்பையும் கற்றுக் கொண்டான்.
அத்தனைக்கும் பணம் நிறைய தேவைப்பட்டதால்...
#பொய்_சொல்லவும்#திருடவும்_ஆரம்பித்தான்.
இறுதியில் #கொலைகாரனாகவும்_ஆனான்...
கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கீழ்க்கோர்ட், மேல் கோர்ட் என வழக்கு நடந்து,
இறுதியாக...
#தூக்கு_தண்டனை_விதிக்கப்பட்டது. அனைத்து அப்பீல்களும் நிராகரிக்கப்பட்டு தூக்கிற்கான நாளும் குறிக்கப்பட்டது...
தூக்கிற்கு முன்தினம் #கடைசி_ஆசை_கேட்கப்பட்டது.
பெற்றோரை சந்திக்க விரும்பினான்.
பெற்றோரும் வந்தனர்.
கதறினர்...
போலீஸ், வக்கீல், நீதிபதி, சாட்சிகள் எல்லோரும் சதி செய்து அவனைத் தூக்குக்கு அனுப்பி விட்டதாக அழுது புலம்பினர்...
மகன் அமைதியாகச் சொன்னான். #அவர்கள்_காரணமில்லை...
#நீங்கள்தான், நான் ஐந்தாம் வகுப்பில் தவறு செய்தபோது..
#ஆசிரியர் என்னை கண்டித்து அடித்தார்.
வீட்டில் அதை நான் சொன்னதும் நீங்கள் உறவினர்கள், நண்பர்களை கூட்டிக் கொண்டு பள்ளிக்கு வந்து ஆசிரியரையும், தடுத்த மற்ற ஆசிரியர்களையும்....
#அடித்து_மிரட்டி... போலீசிலும் புகார் கொடுத்தீர்கள்.
அதிலிருந்து ஆரம்பித்த வீழ்ச்சிதான் .....
#தூக்கு_மேடை_வரை_வந்திருக்கிறது!
“எனது தூக்குக்கு நீங்கள்தான் காரணம் "என அழுதபபடியே சொன்னான்...
ஆசிரியர் கண்டிக்காத மாணவனை நாளை காவல்துறையும் நீதிமன்றமும் தண்டிக்கும்.
இதை பெற்றோர் உணரவேண்டும்.
பரிவும், பாசமும் பிள்ளைகளின் பண்பையும், வாழ்க்கையையும் சீரழிக்கும் விதமாக மாறிவிட அல்ல என்பதை பெற்றோர் புரிந்து கொண்டால் இளைய சமுதாயம் சீராகும் என்பது காலத்தின் கட்டாயம்.

Saturday, 30 March 2019

பாரதி கலை மன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

   பாரதி கலை மன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 31/3/2019, ஞாயிறு  பி.ப. 4:00 மணிக்கு மன்றத் தலைவர் சூரியபிரகாஸ் அவர்கள் தலைமையில் மன்ற மேல் தளத்தில் நடைபெறும். மன்ற உறுப்பினர்கள் , மன்ற நலன் விரும்பிகள் அனைவரும் குறித்த நேரத்திற்கு சமூகம் தந்து ஒத்துழைக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம். அதேவேளை புலம்பெயர் மன்ற நலன்விரும்பிகள் அனைவரையும் தார்மீக ஒத்துழைப்பினை நல்குமாறும் வேண்டுகின்றோம்.