Sunday, 22 September 2019

     அமரர் கிருஷ்ணர் சிவசிதம்பரம் 

 பாரதி கலை மன்றம் 1982 இல் ஸ்தாபிக்கப் பெற்ற போது, அமரர் அவர்கள் 50 வயதினைக் கடந்திருந்த போதிலும் அன்றைய துடிப்பான இளைஞர் கூட்டத்தினருடன் தானும் '"இளைய தளபதியாய் " இணைந்து அவர்களினை போஷிக்கும் போஷகரானார்.இலங்கை போக்குவரத்துச் சபையின் பொறிவலராக சிறந்த பணியாற்றினார். எனினும் 

"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை."

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது எனும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க கிராமமே மேன்மை எனக் கருதி  விவசாயத்தினை தனது சீவனோபாய தொழிலாக முன்னிறுத்தினார்  பல்வேறு பொருளாதாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்த 70 களில் தளராது  விவசாயத்தினை சவாலாக கையிலெடுத்து பல்வேறு சாதனைகளை படைத்துக் காட்டினார். 'மிசின் மாமா' என சிறார்கள் செல்லமாக அழைக்குமளவிற்கு பிரபலம் பெற்றிருந்தார்.நீல நிற  Ford Dexta உழவுஇயந்திரத்தில் 70 களில் 80 களில் கிராமத்து குச்சொழுங்கைகளில் வலம்வந்தது என்றும் மறப்பதற்கில்லை. விவசாயத்துடன் தனது பல்வேறு கலைத் திறன்களூடாக கைப் பணியை வலிதாக சிரமேல் கொண்டு காண்போரைக் கவரக் கூடிய கைவினைப் பொருட்களை சிருஷ்டித்தார் . போராட்ட காலங்களிலும் சரி அதற்கு முன்பாகவும் ,பின்பாகவும் கலைப் படைப்புகள் பலவற்றை பாரதி கலை மன்றத்திற்கென வடிவமைத்தார்..சமகால நிகழ்வுகளை சிறப்பாக வெளிக்கொணரும் வகையிலான பல படைப்புகளை அர்பணித்திருந்தார் . கால மாற்றங்களினூடாக அவற்றில் பல எம்மிடையே இல்லாதிருந்தாலும் அவற்றை பார்த்தவர்களின் பசுமையான நினைவுகள் இன்றும் எம்முன்னே பசுமரத்தாணி போல் நிழலாடுகின்றன.  விக்ரோரியாக் கல்லூரி என்றாலென்ன ஐக்கிய சங்க வித்தியாசாலையாக இருந்தாலென்ன அங்கு நடைபெற்ற பல நிகழ்வுகளில் அன்னாரது பங்கு பணிஇருந்திருக்கும். சாரணர் இயக்கத்தின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தேவையேற்படும் வேளைகளில் எல்லாம் இவர் தனது முத்திரையை பொறிக்காத இடமில்லையெனலாம். பாடசாலை விளையாட்டுப் போட்டிகளின் போது , போட்டி தொடக்குநராக கம்பீரமாக காட்சி தருவார். விளையாட்டு நிகழ்வுகளை பயிற்றுவிப்பதிலும் கைதேர்ந்தவர் எனலாம். இன்றைய பாடசாலை அபிவிருத்திச் சங்கம் அன்று பெற்றார் - ஆசிரியர்  சங்கமாக செயற்பட்ட வேளையிலும் அவர் தனது ஆர்வத்தினை அதன் மீதும் கொண்டிருந்தார்.

  வீட்டினை மாதிரி வீட்டுத் தோட்டமாக எவ்வாறு மாற்றலாம் என்பதற்கு பல்வேறு திட்டங்கள் போடுவதனுடன் செயற்படுத்திக் காட்டியும் வீட்டுத் தோட்டபோட்டிகளில் பங்கு பற்றியும் வெற்றி பெற்றார் 
ஆலய நிகழ்வுகளின்போது தவறாது சமூகம் தந்து இறையருளை வேண்டுவதுடன் தன்னாலியன்ற சரியை தொண்டுகளையும் ஆற்றுவார். கூட்டு பிரார்தனைகளிலும்,பஜனை படிப்பதிலும்  தனது மெய்யுருகி தனது குரல் வெளிப்படுத்துவார். பைரவ பக்தனாக , முருக பக்தனாக, விநாயக பக்தனாக , அம்பிகை பக்தனாக, கிருஷ்ணபக்தனாக பல வேறு வடிவங்களிலும் அவரை நாம் பார்த்திருக்கின்றோம். அண்மைய காலங்களில் அவர் காவி உடை தரித்தே தனது துறவற நிலையை வெளிப்படுத்தி வந்தார். நோய்வாய்ப்பட்டிருந்த வேளையிலும் மிக நிதானமாக தன்னம்பிக்கையுடன் நோயை எதிர்கொண்டார் . தியானப் பயிற்சி ,மூச்சுப் பயிற்சி, யோகாப் பயிற்சி போன்றவற்றிலும் தான் பெற்ற பயனை ஏனையோரும் பெறவேண்டும் என்பதிலும் கவனத்தை செலுத்தினார். அவர் தனது சாதாரண இருக்கையை பத்மாசனமாகவே கடைக்கொள்வார். பொன்னாலை கிருஷ்ண பக்தனாக நாமம் தரித்த அவரது பரந்த நெற்றி என்றும் எம் மனக்கண் முன்னே வரும். எத்தனையோ வாகனங்களை செலுத்தும் திறமை அவரிடம் இருந்தபோதிலும் மிக எளிமையாக துவிச்சக்கர வண்டியிலேயே பல மைல் தூரம் வலம் வந்தார்.இன்று வான் வெளியில் வலம் வருகின்றார் ,


(புகைப்பட அனுசரணை: திரு.சி.முகுந்தன்)